Type Here to Get Search Results !

தருமபுரியில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு பணி தொடக்கம்.


தருமபுரி, ஆக 4  | ஆடி 19 -


தருமபுரி நகர பேருந்து நிலையத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு பணி மற்றும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., இன்று (04.08.2025) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


பின்னர், கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற தொழுநோய் விழிப்புணர்வு பேரணி, தருமபுரி பேருந்து நிலையத்தில் இருந்து தருமபுரி–சேலம் பிரதான சாலை வழியாக மாவட்ட மைய நூலகம் வரை நடைபெற்றது. பேரணியில், “தொழுநோயை வென்று சரித்திரமாக்குவோம்!”, “களங்கம் தவிர்ப்போம்!”, “கண்ணியம் காப்போம்!” போன்ற வாசகங்களுடன் பதாகைகள் ஏந்தி 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முன்னதாக, கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவர்கள், பொதுமக்களிடையே தொழுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடத்தினர். மேலும், துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.


மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: தருமபுரி மாவட்டத்தில் தேசிய தொழுநோய் திட்டத்தின் கீழ், தீர்த்தமலை, அனுமந்தபுரம் மற்றும் தருமபுரி நகரப்புற பகுதிகள் முதற்கட்டமாக தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 1 முதல் 20 வரை, பயிற்சி பெற்ற 225 தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று சுமார் 4,54,709 மக்கள்தொகை கொண்ட 1,13,677 வீடுகளை ஆய்வு செய்கின்றனர்.


கடந்த இரண்டு நாட்களில், தருமபுரி நகரப்புறத்தில் 2,000 வீடுகளில் 6,814 நபர்கள் பரிசோதிக்கப்பட்டதில், 123 பேருக்கு தோல் நோய்கள் காணப்பட்டன; தீர்த்தமலை வட்டாரத்தில் ஒருவர் MB வகை தொழுநோயாளி என உறுதி செய்யப்பட்டார். தொழுநோயின் அறிகுறிகள் – சிவந்த/வெளிர்ந்த உணர்ச்சியற்ற தேமல், கை/கால்களில் மதப்பு, நீண்ட காலம் ஆறாத புண்கள், தோலில் மினுமினுப்பு, காதுமடல் தடித்தல், விரல் மடக்கம் – உள்ளவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும், தொழுநோய்க்கான சிகிச்சை, பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் அனைத்தும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.


மேலும், பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு காலணி, ஊன்றுகோல், கண் கண்ணாடி, கையுறை, சுய பாதுகாப்பு மருந்து பெட்டகம், மாதாந்திர ரூ.2,000 பராமரிப்பு உதவித்தொகை, மற்றும் ரூ.12,000 மதிப்பிலான இலவச அறுவை சிகிச்சை வழங்கப்படும் என தெரிவித்தார். நிகழ்வில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மரு. சாந்தி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு. பூபேஸ், அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொ) மரு. சிவக்குமார், நகர்மன்ற தலைவர் திருமதி இலட்சுமி, துணை இயக்குநர் (தொழுநோய்) மரு. புவனேஷ்வரி, நகராட்சி ஆணையாளர் திரு. சேகர், நகர்நல அலுவலர் மரு. இலட்சிய வர்ணா, மருத்துவர்கள், மாணவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884