பாலக்கோடு, ஆக 05 | ஆடி 20 -
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே காட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சபரி, தனது 5 ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டிருந்தார். தண்ணீர் பற்றாக்குறையும், வேர்ப்புழு தாக்கமும் காரணமாக, கரும்பு விளைச்சல் பாதிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள கரும்புகளை வெட்டி தனியார் நிறுவனத்துக்காக லாரியில் ஏற்றி விற்பனைக்காக கொண்டு சென்றார்.
இந்த லாரி பாலக்கோடு அருகே அவுசிங் போர்டு சாலையில் சென்றபோது, பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் ரவி, தாசில்தார் மற்றும் போலீசார் இணைந்து லாரியை தடுத்து நிறுத்தினர். விவசாயி சபரி "ஏன் தடுத்தீர்கள்?" என்று கேட்டபோது, பாலக்கோடு சுற்றுவட்டாரங்களில் விளைந்த கரும்பு, பாலக்கோடு சர்க்கரை ஆலைக்கும் தான் வழங்கப்பட வேண்டும் என்பது கலெக்டர் உத்தரவாக இருப்பதாகவும், அதனால் தடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் விளக்கினர். மேலும், விவசாயியிடம் கடும் பேச்சு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த தகவல் அறிந்த பிற விவசாயிகள் சம்பவ இடத்திற்கு வந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் கூறியதாவது:
-
விவசாயி சபரி எந்தவொரு சர்க்கரை ஆலைக்குமான ஒப்பந்தமும் செய்யவில்லை.
-
தனிப்பட்ட முறையில் விளைவித்த கரும்பை தனியாருக்கு விற்றது குற்றம் அல்ல.
-
எந்தவொரு சட்ட ஒப்பந்தமுமின்றி நடுவழியில் லாரியை மடக்கி பிடிப்பது அதிகாரபூர்வ தவறாகும்.
இந்தச் சம்பவம், ஏற்கனவே ஏராளமான சிரமங்களை எதிர்கொண்டு விவசாயம் செய்து வரும் விவசாயிகளிடையே மிகுந்த வேதனை மற்றும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகளின் இந்த செயலுக்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.