தருமபுரி, ஆக.15 | ஆடி 30 –
தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி தருமபுரி மாவட்டத்திற்கு வருகை புரிந்து, பல்வேறு அரசு திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதோடு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சி, பி.எம்.பி கல்லூரி அருகில் நடைபெறும் அரசு விழாவில், ரூ.512.52 கோடி மதிப்பிலான 1,044 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.362.77 கோடி மதிப்பிலான 1,073 முடிவுற்ற திட்டங்களை திறந்து வைக்கிறார்.
மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, நகராட்சிகள் துறை, மகளிர் திட்டம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 70,427 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.830.06 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது.
இவ்விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகள் பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.