தருமபுரி, ஆக.15 | ஆடி 30 –
79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்தின் செல்லியம்பட்டி, வரகூர் கிராமத்தில் இன்று (15.08.2025) சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, ஊராட்சி நிதி செலவினம், தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் – II, ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பேச்சு ஆற்றிய அவர், “கிராமங்களின் வளர்ச்சி, தூய்மை பராமரிப்பு, ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப்பைகள் ஒழிப்பு, வீடுகளில் கழிவு பிரிப்பு ஆகியவற்றில் மக்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். பெண்கள் முன்னேற்றம் மற்றும் கல்விக்காக முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப்பெண் திட்டம் ஆகியவற்றின் பயன்களை அனைவரும் பெற வேண்டும்” என்றார்.
தகுதி வாய்ந்த நபர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கப்படும் எனவும், பெண் குழந்தைகளின் உயர்கல்வி முக்கியத்துவம் பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இக்கூட்டத்தில் பென்னாகரம் MLA திரு. ஜி.கே. மணி, அரசு அதிகாரிகள், ஊராட்சி உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.