தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே உள்ள வேப்பிலைஅள்ளி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற செல்லியம்மன் - சாக்கியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 42 ஏக்கர் நிலம், 2025-26ஆம் ஆண்டுக்கான பசலிக்காக ரூ.1,70,300க்கு பொதுஏலத்தில் குத்தகைக்கு விடப்பட்டது. இந்த பொதுஏலம் இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் துரை தலைமையில், பரம்பரை அறங்காவலர் சிவகுமார் முன்னிலையில் நடைபெற்றது. ஏலத்தில் மாமரங்கள் ரூ.98,600, புளிய மரங்கள் ரூ.9,100, தென்னை மரங்கள் ரூ.7,600 மற்றும் புன்செய் நிலம் ரூ.55,000 என மொத்தம் ரூ.1.70 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.
ஏலம் பெற்றவர்கள் தங்களது சொந்த செலவில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு மகசூலை அனுபவிக்கலாம். ஒரே ஆண்டுக்கான இந்த குத்தகையில் நிலம் அல்லது மரங்களில் எந்தவித சேதமும் ஏற்படுத்தக்கூடாது என்றும், நிரந்தர கட்டிடங்கள் அமைக்கக் கூடாது என்றும், குத்தகை காலம் முடிந்தவுடன் நிலம் மீண்டும் ஒப்படைக்கப்பட வேண்டும் என ஆய்வாளர் துரை அறிவுறுத்தினார்.
காரிமங்கலம் பகுதியில் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை 130 ஏக்கர் கோயில் நிலம் ஏலம் விடப்பட்டுள்ளதாகவும், பாலக்கோடு பகுதியில் மட்டும் சுமார் 1,000 ஏக்கர் நிலம் ஏலம் விடப்பட்டு கோயிலுக்கு வருமானம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பொதுஏலத்தில் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு ஏலத்தில் பங்கேற்றனர்.