பாலக்கோடு, ஜூலை 4 – ஆனி 19:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள எண்டப்பட்டி கிராமத்தில், குடும்பத் தகராறு மற்றும் மனச்சோர்வின் காரணமாக ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோபால் நகர் பகுதியை சேர்ந்த சுகதேவ், கார்மென்ட் தையல் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி செல்வி (40), கெலமங்கலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக (செக்யூரிட்டி) பணிபுரிந்தார். 19 ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு கோகுல்தருன் (18), பேரரசி (12) ஆகிய இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
செல்வியின் பெற்றோர் திருமணத்திற்கு எதிராக இருந்ததால், கடந்த 19 ஆண்டுகளாக உறவை துண்டித்திருந்தனர். இந்நிலையில், செல்வியின் தம்பிக்கான திருமணத்துக்கு அழைப்பு வழங்கப்படாததால், அவர் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இன்று காலை வீட்டில் உள்ள மின் விசிறியில் உயிரை மாய்த்துக்கொண்டார். அவர் எழுதிய கடிதத்தில், "என் இறப்புக்கு யாரும் காரணம் இல்லை. மன நிம்மதி இல்லாததால் இந்த முடிவை எடுக்கிறேன்" என கூறியுள்ளார்.
தகவலறிந்த பாலக்கோடு காவல்துறையினர், செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
🔴 உயிரிழப்பு எதற்குமே தீர்வல்ல. உங்கள் மனதில் சோகம், நெருக்கடி, மனஅழுத்தம் இருந்தால், தயங்காமல் உதவி பெறுங்கள்.
📞 தற்கொலை தடுப்பு மற்றும் மனநலம் ஆலோசனை உதவி – 24 மணி நேர உதவி எண்: செஸ்னா - 104 (தமிழ்நாடு அரசு), Snehi - 91-22-2772-6771 / 91-44-2464-0050 அல்லது அருகிலுள்ள அரசு மருத்துவமனை மற்றும் மனநல நிபுணர்களை அணுகவும்.