தருமபுரி, ஜூலை 28 (ஆடி 12):
தருமபுரி வட்டம், கே.நடு.அள்ளி ஊராட்சிக்குட்பட்ட K.N. சவுளூர் கிராமத்தில் உள்ள கழிவுநீர் உறிஞ்சும் தொட்டி கடந்த சில மாதங்களாக செயலிழந்த நிலையில் உள்ளது. மழைக்காலத்திலும், வெயில் நாட்களிலும் தொடர்ந்து கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
தொட்டியின் சுற்றுப்புறத்தில் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் பெருகி, குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் நோய்கள் ஏற்படும் அபாயத்தில் உள்ளனர். முறையான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததாலும், இது பெரும் சுகாதாரச்சிக்கலாக மாறியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு மக்கள் கூட்டமைப்பு சார்பாக, கிராம நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பழுதடைந்த கழிவுநீர் தொட்டியை சீரமைத்து, புதிய கால்வாய் வசதியை ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.