பாலக்கோடு, ஜூலை 28 (ஆடி 12):
பாலக்கோடு வட்டம், தொட்டாரதணஅள்ளி கிராமத்தில் உள்ள ஒரு தனியார் நிலத்தில் அமைந்துள்ள மின்கம்பம் கடந்த பல மாதங்களாக சேதமடைந்த நிலையில் உள்ளது. அந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் முறிந்து விழக்கூடிய அபாய நிலையில் இருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மின்கம்பம், பாலக்கோடு–கிருஷ்ணகிரி சாலையிலேயே அமைந்து உள்ளதால், தினமும் அந்த வழியாக பயணிக்கும் பொதுமக்கள், மாணவர்கள், வாகன ஓட்டிகள் அனைவரும் அச்சத்துடனேயே கடந்து செல்லும் நிலை உருவாகியுள்ளது.
இது குறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தெரியவில்லையா? அல்லது தெரிந்தும் நடவடிக்கை எடுக்க யாரும் முன்வரவில்லையா? என்ற கேள்வி எழுகிறது. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்குள், இக்கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டியது மிகவும் அவசியமாகிறது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மக்கள் கூட்டமைப்பின் பாலக்கோடு வட்டத் தலைவர் மற்றும் பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறார்.