பாலக்கோடு, ஜூலை 9 (ஆனி 24)
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகேயுள்ள சாமனூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இக்கிராமத்தில் உள்ள மாரியம்மன் மற்றும் விநாயகர் கோயிலுக்கு சொந்தமான 3.5 சென்ட் நிலத்தில், பக்தர்கள் வழிபாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் பொங்கல் போன்ற பண்டிகை வேலைகளுக்காக இந்நிலத்தை பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில், அந்தக் கோயில் நிலத்தை ஒரு தனிநபர் ஆக்கிரமித்து, தனிப்பட்ட பயன்பாட்டிற்காக கார் நிறுத்தும் பகுதியாக மாற்றி உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றும், அந்த நிலம் கோயிலுக்கு சொந்தமானது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனாலும் அந்த நபர் நிலத்தை காலி செய்யாமல் தொடர்ந்து ஆக்கிரமித்து வைத்துள்ளதாகவும் கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, கோயிலுக்கு சொந்தமான இடத்தை மீட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, பாலக்கோடு வட்டாட்சியரிடம் கிராம மக்கள் கூட்டு மனு அளித்தனர்.