தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் முன், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 10ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அஞ்சலி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அமைப்பின் தலைவர் முருகன் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர். முன்னாள் இராணுவ வீரர் பொன்னுசாமி, அரிமா சங்க நிர்வாகிகள் தர்மன், சீனிவாசன், மற்றும் மருத்துவர் அசோக் உள்ளிட்டோர் இதில் முன்னிலை வகித்தனர்.
பேருந்து நிலையம் முன்பு நிறுவப்பட்டுள்ள டாக்டர் அப்துல் கலாமின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் நோக்கில் மேக்கலாம்பட்டி ஏரியில் மரக்கன்றுகள் நட்டனர். இந்நிகழ்ச்சியில், பசுமை நல அறக்கட்டளை உறுப்பினர்களான மகேந்திரன், செல்வராஜ், ஆசிரியை செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.