தருமபுரி, ஜூலை 26 | ஆடி 10 -
புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக கூந்தல் தானம் செய்த ஓய்வு பெற்ற தலைமை செவிலியர் அமுதா காசிநாதன் அவர்கள் பெரும் மனிதநேயத்தை காட்டியுள்ளார். அவரது இந்த செயல் பலருக்கும் முன்மாதிரியாக இருக்கிறது. மை தருமபுரி அமைப்பின் சார்பில், தமிழக முழுவதும் புற்றுநோய் நோயால் பாதிக்கப்படும் மக்களுக்கு தொடர்ந்து தட்டணுக்கள், இரத்த தானம் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக குழந்தைகள் வேகமாக முடி உதிர்வு காரணமாக சுயநம்பிக்கையை இழக்கக்கூடிய நிலையில், அவர்களுக்கு பயன்படும் வகையில் கூந்தல் தானம் அளிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தருமபுரி மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், தருமபுரி அரசு மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வுபெற்ற செவிலியர் கண்காணிப்பாளர் அமுதா அவர்கள், புற்றுநோய் குழந்தைகளுக்காக தனது கூந்தலை தானமாக வழங்கி தன்னார்வ சேவைக்கு புது உதாரணமாக உருவாகியுள்ளார். இந்நிகழ்வில் மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் முனைவர் சதீஷ்குமார் ராஜா, செயலாளர் தமிழ்ச்செல்வன், அமைப்பாளர்கள் செந்தில், சண்முகம், தன்னார்வலர் அம்பிகா ஆகியோர் பங்கேற்று, அமுதா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.