தருமபுரி, ஆடவை (ஆனி) 17-
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்த “முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம்” திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டத்தில் மாடித்தோட்டம் அமைப்பதற்காக ரூ.450 மானிய விலையில் 1313 தொகுதிகள், ஊரக பகுதிகளில் காய்கறி விதைத்தளங்கள் ரூ.30 மானிய விலையில் 5,200 தொகுதிகள் மற்றும் ஊட்டச்சத்து தளங்கள் ரூ.75 மானிய விலையில் 4,500 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
மேலும், தமிழ்நாடு மாநில தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.227.69 லட்சம் மதிப்பீட்டில் 16,700 பயனாளிகள் பலனடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்கள் ஆகியவை நெருக்கமான குடியிருப்புகளுக்கு நேரடியாக சென்றடைய, முதல்வரின் உத்தரவின் பேரில் நடமாடும் விற்பனை வண்டிகள் செயல்படுத்தப்பட்டன. இதற்காக ரூ.15,000 மானியத்தில் ரூ.28.5 லட்சம் மதிப்பீட்டில் 190 விற்பனை வண்டிகள் வழங்கப்பட்டு 190 பயனாளிகள் இதனால் பயனடைந்துள்ளனர்.
இத்திட்டங்கள் மூலம் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு நேரடி பயன்கள் ஏற்பட்டு வருகின்றன எனவும், தொடர்ச்சியாக மேலும் பல நலத்திட்டங்கள் ஊட்டச்சத்து பாதுகாப்பையும், வாழ்வாதார வளர்ச்சியையும் நோக்கி செயல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கூறினார்.