தருமபுரி, ஆடவை (ஆனி) 17 -
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள், ஸ்கேன் வசதிகள், உணவின் தரம் மற்றும் அடிப்படை நலவசதிகள் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (01.07.2025) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
புறநோயாளி பதிவு மையம், மருந்தகம், அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு, மயக்கவியல், எலும்புமுறிவு, இயல்முறை சிகிச்சை உள்ளிட்ட பிரிவுகளுக்கு சென்று, நோயாளிகள் பெறும் சேவைகள் குறித்து நேரடியாக கண்காணித்தார்.
உறுப்பு மற்றும் திசுக்களை ஆராயும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன், கருவின் வளர்ச்சி மற்றும் உடல் உறுப்புகளை சோதிக்கும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ஆகிய பிரிவுகளையும் ஆய்வு செய்த அவர், ஸ்கேன் முடிவுகள் உடனடியாக நோயாளிகளிடம் வழங்கப்பட வேண்டும் என மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
நோயாளிகளைத் தொடர்ந்து வரும் உறவினர்கள், உதவியாளர்கள் அமர்ந்திருக்க வேண்டிய இடங்களில் தேவையான வசதிகள் செய்து தர வேண்டும் என்றும், மருத்துவமனை வளாகம் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், சுத்தம் மற்றும் நேரத்தைக் குறித்து ஆய்வு செய்த அவர், மருத்துவர்கள், செவிலியர்கள் நோயாளிகளை அன்போடு பராமரித்து சிகிச்சை வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் மருத்துவமனை முதல்வர் (மு.கூ.பொ) டாக்டர் சிவக்குமார், உள்ளிருப்பு மருத்துவர் டாக்டர் நாகேந்திரன், குழந்தைகள் நலவியல் மருத்துவர்கள் டாக்டர் ரமேஷ்பாபு, டாக்டர் சந்திரசேகர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உடனிருந்தனர்.