தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியத்திற்குட்பட்ட இராமகொண்டஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களின் கல்வி மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக “மகிழ்முற்றம்” திட்டத்தின் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது.
பள்ளிக்கல்வித்துறையின் தலைமையில், மாநிலம் முழுவதும் மாணவர் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் மகிழ்முற்றம் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், மாணவர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு குழுவிற்கும் தனித்தனி கொடிகள் – சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம், வெள்ளை – வழங்கப்பட்டு, மாணவ குழுத் தலைவர்களிடம் வழங்கி பதவியேற்பு விழா நடத்தப்பட்டது.
ஒவ்வொரு குழுவிற்கும் மாணவர்களிலிருந்து தலைவர், துணைத் தலைவர், மற்றும் வழிகாட்டியாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். குழுக்கள் அமைக்கப்பட்டதன் மூலம், மாணவர்களின் திறன் மேம்பாடு, குழு மனப்பான்மை வளர்ச்சி, நேர்மறை நடத்தைகள், தலைமை பண்புகள், மற்றும் ஆசிரியர்-மாணவர் உறவு மேம்பாடு போன்ற முக்கியமான நோக்கங்கள் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும், ஒவ்வொரு குழுவின் செயல்பாடுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கும் நடைமுறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பள்ளிக்காணி, கற்றல் செயல்பாடுகள், மன்ற நிகழ்வுகள், கலை விழாக்கள் மற்றும் பிற செயல்பாடுகளின் அடிப்படையில் மதிப்பீடு நடைபெறும்.
இந்த விழாவில், பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், தமிழாசிரியர் சுப்பிரமணி, மற்றும் பிற ஆசிரியர்கள் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு மகிழ்முற்றத்தின் நோக்கங்கள் மற்றும் அதன் செயல்முறைகள் குறித்து விளக்கங்கள் அளித்தனர்.