தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நகரில், நாளுக்கு நாள் மோசமாகி வரும் போக்குவரத்து நெரிசல், அந்த நகரில் வாழும் மாணவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி வருகிறது. தினமும் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் கடும் சிரமத்துடன் மற்றும் ஆபத்தான முறையில் சாலையை கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பாலக்கோடு நகரின் மையத்தில் பேருந்து நிலையம் அமைந்துள்ளதால், தினந்தோறும் 200-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஓசூர், மாரண்டஹள்ளி, அஞ்செட்டி, பெங்களூர், சென்னை, தருமபுரி, சேலம், கோவை, பழனி உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக நகரின் முக்கிய சாலைகளான எம்ஜி ரோடு, கடை வீதி, ஸ்தூபி மைதானம், தருமபுரி சாலை மற்றும் ஓசூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது.
இதனுடன், குறிப்பாக எம்ஜி ரோடு பகுதியில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அண்ணா தொடக்கப்பள்ளி போன்ற கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள், காலையும் மாலையும் பள்ளி செல்லும் நேரத்தில், சாலையில் இரு வாகனங்களுக்கு நடுவே ஆபத்தான முறையில் நடந்து செல்லும் சூழ்நிலையில் உள்ளனர். சில வணிக நிறுவங்களால் கனரக லாரிகள் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு சரக்குகள் இறக்கப்படுவதும், போக்குவரத்து நெரிசலை மேலும் மோசமாக்குகிறது.
இந்த நிலையில், அவசர ஊர்திகள் (அம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்றவை) நகரினூடாக செல்ல கூட சிரமப்படுகின்றன. பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவிக்கும்போது, அதிகாரிகள் இந்த சூழ்நிலையை கண்டுகொள்ளாமல் மெத்தனமாக செயல்படுவதாகவும், மாணவர்களின் பாதுகாப்பு பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், பாலக்கோடு நகரின் போக்குவரத்தை கட்டுப்படுத்தவும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம், போக்குவரத்து துறை, காவல்துறை ஆகியவைகளை பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.