தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தொகுதி - 4 (Group-IV) பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் எழுத்துத் தேர்வு, தருமபுரி மாவட்டத்தில் இன்று முறையாக நடைபெற்றது. மொத்தம் 45,095 தேர்வர்களுக்கு அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டு, அதில் 38,700 பேர் தேர்வில் பங்கேற்றனர். இதில் 85.85% நேரில் பங்கேற்பு பதிவாக, 6,395 பேர் தேர்வை எழுதவில்லை. தேர்வு காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற்றது.
மாவட்டம் முழுவதும் 150 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, ஒழுங்கான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 150 ஆய்வு அலுவலர்கள், 150 வீடியோ ஒளிப்பதிவாளர்கள், 9 பறக்கும் படை குழுக்கள், 32 மொபைல் யூனிட்கள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்வில் தேர்வர்களுக்கு எந்தவித தாமதமும் இல்லாமல் பங்கேற்கும் வகையில், அனைத்து தேர்வு மையங்களிலும் பேருந்துகள் நின்று செல்லும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு, கூடுதலாக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று தேர்வு மையங்களான அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, இலக்கியம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் அதியமான்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் நேரில் பார்வையிட்டு, பாதுகாப்பு மற்றும் வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அலுவலர்களிடம் தேர்வாணைய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த ஆய்வில் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி ஆர். காயத்ரி மற்றும் பிற அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.