தருமபுரி, ஜூலை 24 | ஆடி 08 -
தருமபுரி மாவட்டம் நூலஹள்ளி, உழவன்கோட்டாய் பகுதியில் நேற்று (ஜூலை 23) நடைபெற்ற சோகம் மிகுந்த சாலை விபத்தில் மூன்று வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறிய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். வழித்தட எண் 40 என்ற அரசு பேருந்துக்குப் பதிலாக, அந்த தொடர்பு இல்லாத வேறு வழித்தடத்திற்கான பழைய பேருந்து இயக்கப்பட்டதே இந்த விபத்துக்கு காரணமாக உள்ளது என அவர் குற்றம்சாட்டினார்.
பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால், அருகிலுள்ள வீட்டுக்குள் நுழைந்து, அங்கு விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுமி உயிரிழந்தது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. முன்னாள் முதல்வர் எடப்பாடியார் தொடர்ந்து புதிய பேருந்துகளை வாங்க வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளார் என்றும், ஆனால் தற்போதைய அரசு இந்த வலியுறுத்தல்களுக்கு செவிகொடுக்காமல் மக்களின் உயிரையே ஆபத்தில் கொடுசெல்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
அரசு அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்துள்ள நிலையில், அந்த குடும்பத்துக்கு குறைந்தது ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும், இடிந்த வீட்டிற்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கும் அரசு, இங்கு குழந்தை உயிரிழந்த போதும் உரிய நிவாரணம் வழங்காமல் இருப்பது நியாயமல்ல எனக் கூறினார். அரசு இனிமேலும் விழித்துக் கொண்டு செயல்பட வேண்டியது அவசியம் என்றும், பொதுமக்களின் உயிர் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.