தருமபுரி, ஜூலை 6 (ஆனி 22, சுபகிருது) –
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ரயில்வே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தண்டவாளப் பகுதியில், அடிபட்டு உயிரிழந்த சுமார் 70 வயதுடைய அடையாளம் தெரியாத முதியவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு, உடலை கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரேத பரிசோதனை நடைபெற, எந்த ஒரு குடும்ப உறுப்பினர்களும் இல்லை என்றும், பலமுறை அறிவித்தும் யாரும் உடலை உரிமை கோரவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், மை தருமபுரி அமரர் சேவை என்ற சமூகநல அமைப்பினர், ஆதரவற்ற இந்த உடலை தங்கள் சேவையின் பகுதியாக, மனிதநேயமும் மரியாதையும் உள்ளடக்கிய முறையில், பச்சையம்மன் கோவில் மயானத்தில் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். இந்த நல்லடக்க நிகழ்வில், தருமபுரி ரயில்வே காவலர் திருப்பதி, மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் முனைவர் சதீஸ் குமார் ராஜா, அமைப்பாளர்கள் செந்தில், கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, அந்த முதியவரை தங்கள் உறவினராக எண்ணி இறுதி மரியாதை செலுத்தினர்.
மை தருமபுரி அமைப்பு இதுவரை மொத்தம் 145 ஆதரவற்ற புனித உடல்களுக்கு நல்லடக்கம் செய்து வந்துள்ளது. இந்த சேவை சமூகத்தில் மனிதநேயத்தையும், மரியாதையையும் முன்னிறுத்தும் ஒரு சிறப்பான பணியாகச் செய்யப்பட்டுள்ளது.