தருமபுரி, ஜூலை 6 (ஆனி 22, சுபகிருது) –
புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக கூந்தல் தானம் வழங்கிய தருமபுரி மாணவி, “மை தருமபுரி” அமைப்பின் மூலம் விழிப்புணர்வு முயற்சியின் ஒரு பகுதியாக, புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு தலைமுடி தேவைப்படும் அவசியத்தை உணர்த்தும் பணியில் தீவிர ஈடுபாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த முயற்சியில், தருமபுரி விஜய் வித்யாஸ்ரம் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வரும் 17 வயது மாணவி சஷ்மிதா ஸ்ரீ, தனது கூந்தலை புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக தானமாக வழங்கி அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார். இந்நிகழ்வில் ஆதி பவுண்டேஷன் ஆதிமூலம், மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் முனைவர் சதீஷ்குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், தன்னார்வலர் அம்பிகா ஆகியோரும் கலந்து கொண்டு மாணவியையும், அவரது பெற்றோரையும், பள்ளிக் குழுமத்தினரையும் பாராட்டினர்.
மை தருமபுரி அமைப்பின் சார்பில், மாவட்டம் முழுவதும் முடி தானம், இரத்த தானம் மற்றும் அவசர மருத்துவ உதவிகள் அடித்தட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், புற்றுநோய் பாதிப்புகளை எதிர்கொள்வோருக்காக, தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.