புதுபட்டாணியர் தெருவைச் சேர்ந்த அன்சர்பாஷா என்பவருக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அவரது மகள் குல்சான் திருமணமாகி கிருஷ்ணகிரியில் வாழ்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அன்சர்பாஷா இறந்துவிட்டார். இதையடுத்து அவரது சொந்தமான வீடு, அவரது மகன் நவாஷ்பாஷா பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, குல்சானின் கணவர் மொகம்மது இம்ரான், கடந்த ஜூலை 26-ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசியபோது, தவறாக பாலக்கோடு சார் பதிவாளர் மீது குற்றச்சாட்டை கூறினார். பின்னர், இது தொடர்பாக விளக்கம் அளித்த அவர், “ஆத்திரத்தில் பேசிவிட்டேன்; என்ன பேசுவது என தெரியாமல் தவறாக கூறிவிட்டேன். அதிகாரிகள் மீது எனக்கு எந்த குறையும் இல்லை. குறிப்பாக, சார் பதிவாளர் கவிதா அவர்கள் மீது வந்த குற்றச்சாட்டு தவறானது. அவருக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை,” என தெரிவித்தார்.
மேலும், இந்தப் பத்திர பதிவு சட்டப்படி நடந்ததா என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில், வாரிசுச் சான்றிதழ் உண்மை தன்மையை அறிய வருவாய் துறைக்கு அனுப்பியுள்ளதாகவும், அது போலி என நிரூபிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சார் பதிவாளர் கவிதா கூறியதாக மொகம்மது இம்ரான் விளக்கம் அளித்தார்.