தருமபுரி, ஜூலை 14, (ஆனி 30) :
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறையின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில், சில்லரை மீன் விற்பனைக்காக ஒரு பயனாளிக்கு ரூ.3.00 இலட்சம் மதிப்பீட்டில் குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய மூன்று சக்கர வாகனத்தை, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
இந்த வாகனம் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 40% மானியம் பொதுப்பிரிவினருக்கும், 60% மானியம் மகளிர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்குமான உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. இதன் மூலம், சில்லரை மீன் விற்பனை செய்பவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அதிக வருமானம் ஈட்ட முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதே நிகழ்வில், பென்னாகரம் வட்டம், செங்கனூர் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி முன்னாள் படைவீரர் திரு. குப்புசாமி அவர்களுக்கு, தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நிதியிலிருந்து ரூ.1.84 இலட்சம் மதிப்பில் சிறப்பு நாற்காலி வழங்கப்பட்டது. இந்த விழாவில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் திரு. விஜயராகவன், முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநர் (மு.கூ.பொ) திருமதி ச. பிரேமா உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.