பென்னாகரம், ஜூலை 15 (ஆனி 31) -
தர்மபுரி மாவட்டம், ஏரியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இராமகொண்டஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். தமிழ் ஆசிரியர் சுப்ரமணி முன்னிலை வகித்தார். விழா தொடக்கமாக, காமராஜரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, மாணவர்களுக்காக பேச்சுப் போட்டி, கட்டுரை, ஓவியப் போட்டிகள் ஆகியவை நடத்தப்பட்டன. மேலும் தேசிய திறனாய்வு தேர்வு மற்றும் முதலமைச்சர் திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அத்துடன், நூறு சதவீத தேர்ச்சி பெறச் செய்த ஆசிரியர்களுக்கு, தலைமையாசிரியர் சார்பில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.