ஒகேனக்கல், ஜூலை 27 | ஆடி 11 -
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் பகுதியில் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவரும் நிலையில், கர்நாடகா அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது. இதனால் பாதுகாப்பு காரணமாக கர்நாடகா அணைகள் முழுக் கொள்ளளவை எட்டி உபரிநீரை திறந்து விட்டுள்ளன.
இதனால், தமிழகத்தின் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 65,000 கன அடியாக இன்று அதிகரித்துள்ளது. நேற்று மாலை வரை வினாடிக்கு 32,000 கன அடி மட்டமாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 6 மணிக்கு 50,000 கன அடியாக உயர்ந்தது. அதன் பின்னர், தொடர்ந்து அதிகரித்து தற்போது 65,000 கன அடி அளவுக்கு அதிகரித்துள்ளது.
இந்த நிலைமை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் ஒகேனக்கல் பகுதியில் அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிப்பதும், பரிசல் இயக்குவதும் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும், கர்நாடகா அணைகளிலிருந்து நீர் திறப்பு தொடரும் பட்சத்தில், இன்று மாலைக்குள் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் இருப்பது முக்கியம் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.