தருமபுரி, ஜூலை 10 (ஆனி 26) -
தருமபுரி மாவட்டத்தில் புளி உற்பத்தியை ஊக்குவிக்கவும், உற்பத்தியாளர் விவசாயிகளுக்கு நேரடி விற்பனை வாய்ப்புகளை உருவாக்கவும் மாவட்ட அளவில் புளி வணிக மையம் அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையிலான குழுவுடன் வேளாண்மை மற்றும் வேளாண் வணிகத்துறையைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டு, தருமபுரி மாவட்டத்தை புளி வணிகத்தில் முக்கியமாக மாற்றும் வழிகளை பற்றி விரிவாகப் பேசினர்.
சேலம் லீபஜார் கமிஷன் மண்டியில் தற்போது புளி விற்பனை நடைபெறுவதால் விவசாயிகள் கமிஷன் (6%) மற்றும் வாடகை சேர்த்து மொத்தம் 8.5% வரை செலவு செய்து வருவதாக விவசாயிகள் கூறினர். இதையடுத்து, தருமபுரி மாவட்டத்திலேயே ஒருங்கிணைந்த புளி வணிக மையம் அமைக்கப்படும் என ஆட்சியர் உறுதியளித்தார். மேலும், "மஞ்சளுக்கு ஈரோடு" எனப்படும் போன்று, "புளிக்குத் தருமபுரி" என்ற பிரபலப்படுத்தலை ஏற்படுத்த வேண்டும் என்றும், இது மாவட்டத்தின் வேளாண் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பாக அமையும் எனவும் ஆட்சியர் குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) திரு. மு. இளங்கோவன், ஒழுங்குமுறை விற்பனை குழு செயலாளர் திரு. அருள்மணி, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் திருமதி கங்கா, பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் திரு. தெய்வமணி, புளி வணிகம் மாவட்ட தலைவர் திரு. பச்சமுத்து பாஸ்கர், செயலாளர் திரு. வினோபாஜி, புளி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் திரு. சின்னசாமி உள்ளிட்டோர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.