கடத்தூர், ஜூலை 11 (ஆனி 27) -
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மணியம்பாடி அஞ்சல், ஆலமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இராமசந்தரத்தின் மகன் இளையராஜா என்பவர், தனது தந்தையின் பெயரில் இருந்த 5 ஏக்கர் பூர்வீக விவசாய நிலத்தை கடந்த 17.06.2025 அன்று கடத்தூர் துணை பதிவாளர் அலுவலக ஆவண எண் 1330/2025-ன் மூலம் பாகப்பிரித்துள்ளார். இதில் சுமார் 3.83 ஏக்கர் நிலம் அவருக்கும், அவரது அக்கா ஜெயபிரியாவிற்கு 1 ஏக்கர் நிலமும், மேலும் 16 சென்ட் நிலமும் இருவருக்கும் பொதுவாக பாகப்பிரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலத்திற்கு தனிப்பட்டா எடுக்க, இளையராஜா இணையதளத்தின் மூலம் மனுவை பதிவுசெய்து, அதன் நகலை மணியம்பாடி கிராம சர்வேயர் விஜயகுமாரிடம் நேரில் சென்று வழங்கி, தகுந்த ஆதாரங்களுடன் தனிப்பட்டா ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால், சர்வேயர் விஜயகுமார் இதற்காக ரூ.10,000 லஞ்சம் தர வேண்டும் என உறுதியாகக் கூறியதாக கூறப்படுகிறது.
லஞ்சம் கொடுக்க மறுத்த இளையராஜா தருமபுரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் எழுத்துமூலமாக புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் பெருமாள் தலைமையிலான குழுவினர் நடவடிக்கை எடுத்து, ரசாயன தடவிய ரூ.10,000-ஐ புகார்தாரரிடம் வழங்கி, அவரை சர்வேயரிடம் அனுப்பினர். இன்று 11.07.2025 காலை, புகார்தாரர் லஞ்சத் தொகையை சர்வேயரிடம் வழங்கிய வேளையில், மறைந்திருந்த காவல்துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து சில முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், குற்றச்சாட்டுகளை அடிப்படையாக கொண்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.