தருமபுரி, ஜூலை 11 (ஆனி 27) -
உலக மக்கள் தொகை தினம் - 2025 நிகழ்ச்சி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. தலைமையில் இன்று (11.07.2025) நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத் துறையின் குடும்ப நல இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், உலக மக்கள் தொகை தின உறுதிமொழி வாசிக்கப்பட்டது.
இந்த ஆண்டு "ஆரோக்கியமான, போதிய இடைவெளியுடன் பிள்ளைப் பேறு திட்டமிடுதல்" என்ற கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வு அனுசரிக்கப்பட்டது. மக்களின் நலனுக்காக மக்கள் தொகை கட்டுப்பாடு, சிறு குடும்ப நெறி, பெண் கல்வி, இளம் வயது திருமண தடுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களை பொதுமக்கள் மத்தியில் எடுத்துச்செல்ல உறுதிமொழி ஏற்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் உறுதிமொழியில் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து கிருஷ்ணா பாராமெடிக்கல் கல்லூரி மாணவர்கள் சார்பாக 200-க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பதாகைகளுடன் மக்கள் தொகை தின பேரணியில் ஈடுபட்டனர். இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பேரணி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி இலக்கியம்பட்டியில் நிறைவு பெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் ம. சாந்தி, துணை இயக்குநர்கள் பாலசுப்பிரமணியன், பாரதி, அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் ரமேஷ்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.