தருமபுரி, ஜூலை 8 (ஆனி 23)-
மாநில முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு முன்னெடுத்த “மக்களுடன் முதலமைச்சர்” திட்டத்தின் மூன்று கட்ட வெற்றிகரமான அமலுக்குப் பின்னர், தற்போது நான்காவது கட்டமாக “உங்களுடன் ஸ்டாலின்” என்ற புதிய திட்டம் நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் இதற்காக 1,382 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வீடு வீடாக சென்று மக்களுக்கு தேவையான அரசுத் தகவல்களை வழங்கி, பயனாளிகள் அடையாளம் காணப்பட்டு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், மக்களுக்கு நேரடியாக சேவைகளை கொண்டு சென்று, அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, பயனாளிகளை குறைவான நேரத்திலேயே அடையாளம் காண்பதும் ஆகும்.
இதில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் முக்கிய பங்காற்றுகிறது. இத்திட்டத்தில், இதுவரை உரிமை தொகையை பெறாத தகுதியுடைய பெண்கள் முகாம்களில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்களில் மட்டுமே வழங்கப்படும்.
தருமபுரி மாவட்டத்தில் ஜூலை 15 முதல் அக்டோபர் 15 வரை மொத்தம் 176 சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இந்த முகாம்கள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் தருமபுரி வட்டாட்சியர் திரு. சண்முகசுந்தரம் மற்றும் பல தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பொதுமக்களிடம் கையேடுகளை வழங்கி திட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.