தருமபுரி, ஜூலை 8 (ஆனி 23) -
தருமபுரி மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., தெரிவித்தார். 2021-22ஆம் ஆண்டிற்கான மானியத் திட்டத்தின் கீழ், நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்கள் நினைவாக இந்த போட்டிகள் மாவட்ட அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கு 16.07.2025 அன்று, கல்லூரி மாணவர்களுக்கு 17.07.2025 அன்று தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 9.00 மணி முதல் பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளன. போட்டிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ.5000, ரூ.3000, ரூ.2000 என்ற பரிசுத்தொகைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்காக இரண்டு சிறப்புப் பரிசுகளும் (தலா ரூ.2000) வழங்கப்படும்.
பேச்சுப்போட்டி தலைப்புகள்:
அம்பேத்கர் பிறந்த நாள்
-
பள்ளி மாணவர்களுக்கு: பூனா உடன்படிக்கை, கற்பி-ஒன்றுசேர்-புரட்சிசெய், அரசியலமைப்புச் சட்டமும் அம்பேத்கரும், அம்பேத்கரின் படைப்புகள்
-
கல்லூரி மாணவர்களுக்கு: சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், சுதந்திரம்-சமத்துவம்-சகோதரத்துவம், அம்பேத்கரின் சாதனைகள், அரசியல் சாசனத்தின் தலைமை சிற்பி
கலைஞர் பிறந்த நாள்
-
பள்ளி மாணவர்களுக்கு: நெஞ்சுக்கு நீதி, செம்மொழி மாநாடு, திரைத் துறையில் முத்தமிழறிஞர், அரசியல் வித்தகர், தெற்கிலிருந்து ஒரு சூரியன்
-
கல்லூரி மாணவர்களுக்கு: அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள், திராவிட சூரியனே குறளோவியம், கலைஞரின் எழுதுகோல், சமூகநீதி காவலர்
மாணவர்கள் தங்கள் பள்ளித் தலைமையாசிரியர் அல்லது கல்லூரி முதல்வரின் பரிந்துரைக் கடிதத்துடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.