பாப்பாரப்பட்டி, ஜூலை 24 | ஆடி 8 -
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள பள்ளிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள சந்தன கருப்புசாமி கோயிலில், ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு பக்தி மற்றும் பக்தோன்முகத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இவ்விழாவின் போது சந்தன கருப்புசாமி, காளியம்மன், சுடலைமாட சுவாமிகள் உள்ளிட்ட தீர்த்தத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டது. குறிப்பாக, சந்தன கருப்புசாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் நேரில் தரிசனம் செய்தனர்.
கருப்புசாமிக்கு பக்தர்கள் வழிபாட்டு நம்பிக்கையின் அடிப்படையில் கெடா வெட்டி, பொங்கல் வைத்து நைவேத்தியம் அளித்து வழிபட்டனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அருள் வாக்குகள் வழங்கப்பட்டதுடன், அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு நிகழ்ச்சிகளை காண ஏராளமான பக்தர்கள் குடும்பங்களுடன் வருகைதந்து கருப்புசாமியை வழிபட்டு நம்பிக்கையுடன் சென்றனர்.