தருமபுரி, ஜூலை 20 | ஆடி 03 -
தருமபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் சிறப்பு பயிற்றுநர்கள், தங்களின் பணி நிலைமைக்கு உரிய உரிமைகள் வழங்கப்பட வேண்டும் எனக் கோரிய மனுவை தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தருமபுரி தலைமை தபால் நிலையம் மூலம் பதிவு தபால் வழியாக அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் 1.32 இலட்சம் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு RPWD Act 2016ன் அடிப்படையில் சிறப்பான கல்வி மற்றும் வாழ்க்கைத் திறன் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டியுள்ளது. இதை நடைமுறைப்படுத்த 1600க்கும் மேற்பட்ட சிறப்பு பயிற்றுநர்கள் மாநிலம் முழுவதும் முழு நேர சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சிறப்பு பயிற்றுநர்களின் முக்கிய கோரிக்கைகள் பின்வருமாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்: தொகுப்பூதியாளர்களுக்கான 5% ஊதிய உயர்வு தொடர்பான அரசு உத்தரவு (R.C.No.1352/A3/SS/2025, நாள்: 11.07.2025) பிறப்பிக்கப்பட்டபோதும், இதில் உள்ளடங்கிய கல்வி பயிற்றுநர்களுக்கான ஊதிய உயர்வு தவிர்க்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊதிய உயர்வின்றி பணியாற்றி வரும் இவர்களுக்கு உடனடி ஊதிய உயர்வுடன் அதிகாரபூர்வ உத்தரவு வழங்கப்பட வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.
மேலும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வி ஆணையர் ஆகியோர் சிறப்பு பயிற்றுநர்களுக்குப் பணி ஆணை வழங்க உத்தரவிட்டிருந்தாலும், தற்போது வரை செயல்படுத்தப்படவில்லை. எனவே, நிலையான பணி ஆணைகள் வழங்கப்பட வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொழிலாளர் வைப்பு நிதியான EPF திட்டம் சென்னை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதை மாநிலம் முழுவதும் எப்போதும் சேர்ந்த தினம் முதல் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுள்ளனர். தற்போது சில மாவட்டங்களில் மட்டுமே வழங்கப்பட்டுள்ள ஊர்திப் படி (Travel Allowance) மாநிலம் முழுவதும் உள்ள பயிற்றுநர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
இதனுடன், உச்சநீதிமன்றம் வெளியிட்ட ரஜ்னிஷ்குமார் பாண்டே தீர்ப்பின் அடிப்படையில் நாடு முழுவதும் சிறப்பு பயிற்றுநர்களுக்கு நிரந்தர பணி வழங்கப்படுவதுபோல, தமிழகத்திலும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தில் பணியாற்றும் பயிற்றுநர்களுக்கு நிரந்தர நியமனமும், காலமுறை ஊதியமும் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.