தருமபுரி, ஜூலை – 4 (ஆனி 20):
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் “ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” என்ற புதிய திட்டத்தை இன்று (04.07.2025) தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் தொடக்கவிழாவில் பயனாளிகளுக்கு காய்கறி விதைத்தொகுப்புகள், பழச்செடித் தொகுப்புகள் மற்றும் பயறு வகைத் தொகுப்புகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சி, தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் காணொளி காட்சி வழியாக ஒளிபரப்பப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இதில் கலந்து கொண்டு, மாநில அளவிலான தொடக்க நிகழ்வைப் பார்வையிட்டு, 75 பயனாளிகளுக்கு நேரில் காய்கறி, பழச்செடி மற்றும் பயறு விதைத்தொகுப்புகளை 100% மானயித்தில் வழங்கினார்.
வழங்கப்பட்ட காய்கறி விதைகள்: தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கீரை வகைகள், கொத்தவரை. பழச்செடிகள்: பப்பாளி, கொய்யா, எலுமிச்சை. பயறு வகைகள்: மரத்துவரை, அவரை, காராமணி ஆகியவையாகும். இந்நிகழ்ச்சியில் வேளாண்மைத் துறை இணை இயக்குநர் திருமதி சித்ரா, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் திருமதி பாத்திமா, உதவி இயக்குநர் திரு சக்திவேல், பென்னாகரம் பேரூராட்சி தலைவர் திரு வீரமணி, வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் மா.அ. வெண்ணிலா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.