தருமபுரி, ஜூலை 30 | ஆடி 14 :
2024–2025 ஆம் ஆண்டுக்கான சம்பா பருவத்தில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (தாஸ்மாக்) மூலமாக, அரூர் வட்டத்தில் உள்ள அரூர் மற்றும் நரிப்பள்ளி பகுதிகளில், கடந்த 11.03.2025 அன்று நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த இரண்டு நெல் கொள்முதல் நிலையங்களின் மூலம் இதுவரை 659 விவசாயிகளிடமிருந்து மொத்தம் 2533 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தற்போது சம்பா பருவ அறுவடை முடிவடைந்து, நெல் வரத்து குறைந்துள்ளதால், அரூர் மற்றும் நரிப்பள்ளி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் பணிகள் ஜூலை 31, 2025 அன்று முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இது குறித்து, விவசாயிகள் தங்களிடம் அறுவடை செய்யப்பட்ட நெல் இருப்பின், அதனை உரிய ஆவணங்களுடன் கொள்முதல் நிலையங்களில் வழங்கி பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது, என தருமபுரி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.