தருமபுரி, ஜூலை 30 | ஆடி 14 -
தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்த “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ், 30.07.2025 அன்று திட்ட முகாம்கள் நடைபெற்றன. இத்திட்டத்தின் நோக்கம் அரசுத் துறைகளின் சேவைகளை நேரடியாக மக்களின் இல்லங்களுக்கு சென்று வழங்குவதே ஆகும்.
இந்த முகாம்கள், தருமபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூர் ஒன்றியத்திலுள்ள தாளநத்தம் சமுதாய கூடம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திலுள்ள மெனசி சமுதாய கூடம், தருமபுரி ஒன்றியத்தில் உள்ள இலக்கியம்பட்டி வின்சென்ட் திருமண மண்டபம் மற்றும் நல்லம்பள்ளி ஒன்றியத்தில் பாலஜங்கமனஹள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்றன. இவற்றில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டதுடன், அவர்களுடன் நேரடியாக உரையாடி உடனடி தீர்வுகளையும் வழங்கினார்.
இத்திட்ட முகாம்களில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் செயல்பட்ட மருத்துவ முகாம்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார். மக்கள் நலத்திட்ட உதவிகள் தொடர்பான மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, முகாம்களில் பங்கேற்ற 25 பயனாளிகளுக்கு பிறப்பு சான்றிதழ்கள், பட்டா மாறுதல் ஆணைகள், மின்விநியோகம் பெயர்மாற்ற ஆணைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அடையாள அட்டைகள் மற்றும் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டைகள் வழங்கப்பட்டன.
மாநில அளவில் 15.07.2025 அன்று சிதம்பரத்தில் இந்த திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்திருந்தார். தருமபுரி மாவட்டத்தில் மட்டும் ஜூலை 15 முதல் அக்டோபர் 3 வரை மொத்தம் 176 திட்ட முகாம்கள் நடைபெற உள்ளன. இவற்றில் நகர்ப்புறங்களில் 13 அரசு துறைகள் சார்ந்த 43 சேவைகள், ஊரகப் பகுதிகளில் 15 துறைகள் சார்ந்த 46 சேவைகள் வழங்கப்பட உள்ளன. இம்முகாம்களில் அரசு சேவைகள் வழங்கும் துறைகள் தனித்தனி அரங்குகளில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு செயல்படுகின்றன.
பொதுமக்கள் மனுக்கள் மீது உடனடி தீர்வுகள் வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தீர்வு உடனே வழங்க முடியாத மனுக்கள் அதிகபட்சம் 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் எனவும், மாற்றுத்திறனாளிகள் தங்களது மனுக்களை சிரமமின்றி சமர்ப்பிக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு. ரூபன் சங்கர் ராஜ், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி காயத்ரி, அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு. சின்னசாமி, ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் திரு. சரவணன், வட்டாட்சியர்கள் திரு. சௌகத்அலி, திரு. செந்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள், முன்னாள் மற்றும் தற்போதைய உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள், பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.