தருமபுரி, ஜூலை 28 | ஆடி 12 -
தருமபுரி மாவட்டத்தில் சமூக பொறுப்பு நிதி (CSR Fund) மூலம், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு தேவையான முக்கிய உபகரணங்கள் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டன. இந்த வழங்கலில், ரூ.2,01,146 மதிப்பிலான உபகரணங்கள் அடங்கியது. இதில், மீட்பு வலை (safety net) ரூ.7,280 மற்றும் ஸ்கூபா டைவிங் உபகரணங்கள் (Scuba diving gear) ரூ.1,93,866 மதிப்பில் வழங்கப்பட்டன.
இந்த உபகரணங்கள் ஆழமான கிணறு, ஆறு, அணை, கடல், குகை பகுதிகளில் நிகழும் விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கு தீயணைப்பு வீரர்களுக்கு மிக முக்கியமாக பயன்படும். மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கூட்டு முயற்சியாக இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., மற்றும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் திரு. ராஜேஷ், CSR ஒருங்கிணைப்பாளர் திரு. சுப்ரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.