தருமபுரி, ஜூலை 28 | ஆடி 12 -
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அதியன் கூட்டரங்கத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் இன்று (ஜூலை 28) நடைபெற்றது. பொதுமக்களின் தினசரி வாழ்வை பாதிக்கும் முக்கியமான பிரச்சனைகள் குறித்து நேரடியாக மனுக்களை அளிக்க இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர், பேருந்து சேவை, நில உரிமை (பட்டா/சிட்டா), குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் நல உதவிகள் போன்ற பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 538 மனுக்கள் பெறப்பட்டன. இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. சவுந்தர ராஜன், சமூக நல அலுவலர் திரு. முரளி, காவல்துறை அதிகாரி திரு. மனோஜ், வட்டாட்சியர் திருமதி. லலிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மனுக்கள் அனைத்தும் சீராக பதிவு செய்யப்பட்டு, தொடர்புடைய அலுவலர்களிடம் அனுப்பப்பட்டு, அவற்றிற்கு விரைவில் தீர்வு அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர் உத்தரவிட்டார்.