பாலக்கோடு, ஆடவை (ஆனி) 17 –
இவ்வாறு திரளாக மாம்பழங்கள் கிடைத்துள்ளபோதிலும், வியாபாரத்தில் சரியான விலை கிடைக்காததால் பல இடங்களில் பழங்களை அறுவடை செய்யாமல் விட்டு விட்டுச் செல்வது வேதனையளிக்கிறது. மாம்பழங்கள் தோட்டத்திலேயே பழுத்து அழுகி வீணாகி வருகின்றன. மேலும், சாலையோரம் பழங்கள் கொட்டப்படுவதால், அவை குரங்குகள் மற்றும் பறவைகளின் உணவாக மாறி வருகின்றன.
இந்த நிலையை தனியார் மாங்கூழ் தொழிற்சாலைகள் தங்கள் நலனுக்கேற்ப பயன்படுத்திக் கொண்டு, விவசாயிகளை கட்டுப்படுத்தும் வகையில் சிண்டிகேட் அமைத்து, மாம்பழங்களை கிலோ ரூ.3 முதல் ரூ.5 வரை குறைந்த விலையில் கொள்முதல் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்திக்க நேரிடுகிறது. பலரும் கடனடிபட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவிக்கும்போது, “நாங்கள் பெரும்வெளியில் சாகுபடி செய்துள்ள மாம்பழங்களுக்கு சந்தையில் உரிய விலை கிடைப்பதில்லை. தனியார் நிறுவனங்கள் நாங்கள் கொடுக்கும் விலைக்கு வாங்கத் தயார் இல்லை. கட்டாயமாக அவர்களின் விலையில் ஒப்புக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது நியாயமல்ல” என வேதனையுடன் கூறுகின்றனர்.
இதற்காக அரசு முன்னோக்கி வந்து வேளாண்மை விற்பனை மையம் மூலம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் பாலக்கோட்டை மையமாக கொண்டு அரசு மாங்கூழ் தொழிற்சாலை நிறுவப்படும் பட்சத்தில், விவசாயிகளுக்கு நிலையான விலை கிடைப்பதுடன், இப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்புகளும் உருவாகும்.
எனவே தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, தர்மபுரி மாவட்டத்தில் அரசு மாங்கூழ் தொழிற்சாலை நிறுவி, மா விவசாயிகளின் வாழ்க்கையை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.