தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த சிக்கார்தன அள்ளியில் பிரசித்தி பெற்ற கரக செல்லியம்மன் கோவில் இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான சுமார் 34 ஏக்கர் நிலம் சில தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த நிலையில் ஊர் பொதுமக்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது, நீதிமன்றம் விரைவில் கோவில் நிலங்களை பொது ஏலம் விட வேண்டும் என தீர்ப்பு வழங்கி பல மாதங்கள் ஆகியும், இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் கோவில் நிலத்தை ஏலம் விடாமல் மெத்தன போக்குடன் செயல்பட்டு, நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாகவும், கோவிலுக்கு வர வேண்டிய வருமானம் வராமல் உள்ளதால் கோயில் திருப்பணிகள், பூஜைகள் போன்ற கோயிலின் அன்றாட பணிகள் கூட செய்ய முடியாமல் தவித்து வருவதாகவும் அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் கோயில் நிலத்தில் இருந்த பழமையான புளியமரம் சாய்ந்து விழுந்து 3 மாதமாகியும் அதனை ஏலம் விட அதிகாரிகள் முன்வரவில்லை என்றும் எனவே தமிழக முதல்வர் உடனடியாக கோயில் நிலம் ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மெத்தன போக்கை கடைபிடிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.