பாலக்கோடு, ஜூலை 10 (ஆனி 26)-
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கூட்டரங்கில் காவல்துறை சார்பில் பள்ளி குழந்தைகளுக்கான எதிரான குற்ற தடுப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் வழிகாட்டு நிகழ்ச்சி ஸ்ரீ மூகாம்பிகை கல்வி நிறுவனங்களின் தலைவர் மூகாம்பிகை கோவிந்தராஜ்.ஜி தலைமையில் நடந்தது. குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி வரவேற்று பேசினார். அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வீரம்மாள் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதரன், துணை காவல் கண்காணிப்பாளர்கள் ராமமூர்த்தி, ராஜசுந்தர் ஆகியோர் கலந்து கொண்டு நல்ல சமுதாயத்தை உருவாக்கவும், பெண்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றி வாழவும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
குறிப்பாக பெண் குழந்தைகள் தங்களை சுற்றி உள்ள உறவினர்கள் மற்றும் முன்பின் தெரியாதவர்களின் அத்துமீறிய செயல்கள் குறித்தும், நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்தும், தொடவே கூடாது என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் 18 வயதிற்குள்ள குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து கட்டணமில்லா தொலைபேசி எண்களான 1098, 181, 1930, காவல் உதவி செயலி பதிவிறக்கம் ஆகிய உதவி மையத்திற்க்கு தொடர்பு கொண்டு தகவல் அளிப்பதன் மூலம் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையில் இருந்து பாதுகாக்கப்படுவீர்கள் என ஆலோசனைகள் வழங்கியவர்கள் ஒவ்வொரு பள்ளிகளிலும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி போலீஸ் அக்கா என்ற செயலி மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
முன்னதாக பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை மூகாம்பிகை கோவிந்தராஜி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியானது பேருந்து நிலையம், கடைவீதி, ஸ்தூபிமைதானம், காவல் நிலையம் வழியாக கூட்டரங்கை அடைந்தது. இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர்கள் பாலசுந்தரம், சித்ராதேவி, உதவி காவல் ஆய்வாளர்கள், ஆசிரியர், ஆசிரியைகள், பள்ளி மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் பள்ளி முதல்வர் அருள் குறிஞ்சி நன்றி தெரிவித்தார்.