பென்னாகரம், ஜூலை 15 (ஆனி 31) -
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் சுற்றுலா தளம், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் நேரங்களில் பாதுகாப்பு காரணமாக அடைக்கப்படுகிறது. இதனால் சுற்றுலா தளத்தை நம்பி வாழ்க்கை நடத்தும் பல்வேறு தொழிலாளர்கள் தொழில் இழப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். இந்த நிலையை கண்டித்து, அவர்களுக்காக நிவாரணம் மற்றும் நிரந்தர தீர்வு கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றியச் செயலாளர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம், ஒகேனக்கல் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்தது. இதில் சுற்றுலா தளத்தை நம்பி வாழும் படகு ஓட்டிகள், சமையல் மற்றும் விடுதி தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள், சிறு குரு தொழிலாளர்கள், மசாஜ் பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு, அரசின் நடவடிக்கைகள் மீது கடும் கண்டனம் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டக் கோரிக்கைகள்:
-
நீர்வரத்து குறைவாக இருந்தால்கூட சுற்றுலா தளத்தை திறந்தே வைத்திருக்க வேண்டும்
-
நீர்வரத்து காரணமாக சுற்றுலா தளம் மூடப்படும் நேரங்களில் வாழ்வாதாரம் இழக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்
-
அதிகாரிகளின் விருப்பப்படி தளத்தை திறப்பதும் மூடுவதும் தவிர்க்கப்பட வேண்டும்
-
வெள்ளப்பெருக்கு காலங்களில், சுற்றுலா பணிகளை நிரந்தரமாக ஒகேனக்கல் பகுதியில் மாற்றும் திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும்
-
சுற்றுலா தளத்தை நம்பி வாழும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு உறுதி அளிக்க வேண்டும்
-
ஒகேனக்கல் சுற்றுலா தளத்துக்கு மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டில்லி பாபு, மாநில குழு உறுப்பினர் குமார், மாவட்ட செயலாளர் சிசுபாலன், தொண்டர்கள் மாதம், விசுவநாதன், சக்திவேல், அன்பு, ஒன்றிய குழு உறுப்பினர் மாரிமுத்து, ஊட்டமலை கிளைச் செயலாளர் வரதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், "வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்", "தொழிலாளிகளை புறக்கணிக்காதே", "ஒகேனக்கலை நிரந்தர சுற்றுலா தளமாக அறிவிக்கவேண்டும்" உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி, மாவட்ட நிர்வாகத்திற்கு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.