காரிமங்கலம், ஜூலை 22 | ஆடி 06 -
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே குட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமாரின் மூன்று வயது மகன் நவீன் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை காரிமங்கலம் பேருந்து நிலையத்தில் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிவக்குமாரின் தந்தை சின்னசாமி, பேரன் நவீனை அழைத்துச் சென்று காரிமங்கலம் பேருந்து நிலையத்திற்குள் அமைந்திருந்த சந்தையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தபோது, கூட்டத்தில் சிறுவன் திடீரென காணாமல் போனான்.
அதிக கூட்டம் காணப்படும் அந்த சந்தை பகுதியில் பேரனை காணவில்லையென சின்னசாமி கவலைக்கொண்டு அங்கும் இங்கும் தேடியும் பயனில்லை என கருதி, உடனடியாக காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தகுமார் மற்றும் சுந்தரமூர்த்தி ஆகியோர் சி.சி.டி.வி காட்சிகளை பயன்படுத்தி சிறுவனைத் தேடும் பணியில் தீவிரமாக இறங்கினர்.
காட்சிகளில் சிறுவன் சந்தைபக்கம் கூட்டத்தோடு சென்றிருப்பது தெரிய வந்ததை அடுத்து, அந்த பகுதியில் போலீசார் விரைந்து சென்று தேடியபோது, சிறுவன் ஓரிடத்தில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் சிறுவனை பாதுகாப்புடன் மீட்டு, அவரது தாத்தா சின்னசாமியிடம் ஒப்படைத்தனர். ஒரே மணி நேரத்திற்குள் சிறுவனை மீட்ட காவல்துறையின் விரைவு செயல்திறனை பாராட்டிய போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், தேடுதல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.