பாலக்கோடு, ஜூலை 19 | ஆடி 03 -
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே 15 வயது சிறுமியுடன் திருமணம் செய்ததாக 34 வயதான கூலி தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலக்கோடு பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று தற்போது வீட்டிலேயே இருந்தார். இந்த நேரத்தில், நல்லம்பள்ளி அருகே கம்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் (வயது 34) என்பவர், பாலக்கோட்டில் உள்ள தன் அக்கா வீட்டுக்கு அடிக்கடி வருகை தந்துள்ளார்.
அங்கு சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவருக்கும் காதல் உருவாகி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இது பற்றி சிறுமியின் பெற்றோர் தெரிந்ததும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கடந்த ஜூலை 15ம் தேதி, செல்வராஜ் அந்த சிறுமியை மேச்சேரி பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு, சிறுமியுடன் வாழ தொடங்கியதாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர், பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் செல்வராஜை கைது செய்து, பாக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தர்மபுரி சிறையில் அடைத்துள்ளனர்.