தருமபுரி, ஜூலை 23 | ஆடி 07 -
தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளியிலிருந்து டிஎம்எஸ் காலனி மற்றும் பிற குடியிருப்புப் பகுதிகள் செல்லும் முக்கிய சாலை வழியில் சாக்கடை மற்றும் கால்வாய்களில் கடந்த பத்து நாட்களாக அடைப்பு ஏற்பட்டு, சாக்கடை நீர் வெளியே கசியும் நிலை உருவாகியுள்ளது. இதனால் மழைக்காலத்தில் மேலும் மோசமான சுகாதார சிக்கல்கள் ஏற்படக் கூடும் என அச்சம் வெளியிடப்படுகிறது.
இப்பிரச்சினை குறித்து பொதுமக்கள் BDO அலுவலகத்துக்கும், சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கும் நேரிலாகவும் தொலைபேசியிலும் புகார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், "செய்வோம், பார்க்கிறோம்" என்ற பதில்களே கிடைக்க, எந்தவொரு நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், இந்தப் பகுதியில் குப்பை மேலாண்மை முறையாக நடைபெறவில்லை. பொதுமக்கள் காலியாக உள்ள இடங்களில் குப்பைகளை கொட்டுவதால், அந்த இடங்கள் மாசடையும் நிலைக்கு போய்விட்டன. முறையாக நிர்ணயிக்கப்பட்ட இடங்களிலும், அறிவிப்பு பலகைகளும் இல்லாததால், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம், சச்சரவுகள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு ஒரு முறை டிராக்டர் மூலம் குப்பை அகற்றப்பட்டாலும், தொடர்ந்து பராமரிப்பு இல்லாததால் மீண்டும் அதே நிலை தொடர்கிறது.
பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளில், சாக்கடைகள் உடனடியாக சுத்தம் செய்யப்பட வேண்டும், வாரந்தோறும் நிலையான முறையில் சுத்திகரிப்பு நடைபெற வேண்டும், பொது அறிவிப்புகள் (மைக் வாயிலாக) வழங்கப்பட வேண்டும் என்றும், குப்பை கொடுக்கும் இடங்கள் நிர்ணயிக்கப்பட்டு அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
வரி வசூலிக்க மட்டும் வாரந்தோறும் அறிவிப்பு செய்யும் நிர்வாகம், இவ்வாறு பொதுமக்களின் உடல்நலத்தையும் சுகாதாரத்தையும் பாதிக்கும் பிரச்சினைகளில் நடவடிக்கை எடுக்க தவறுவது ஏன்? எனக் கேள்வி எழுப்புகின்றனர் மக்கள். உடனடியாக நடவடிக்கை எடுத்து விடிவை ஏற்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும் என இலக்கியம்பட்டி குடியிருப்போர் கேட்டுக் கொள்கின்றனர்.