தருமபுரி, ஜூலை 4 (ஆனி 19) -
தருமபுரி மாவட்டத்தில் வசித்து வரும் நலிந்த நிலையிலுள்ள முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் மாநில அரசு திட்டத்தின் கீழ், 2025-2026 ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டைச் சார்ந்த நலிந்த நிலையில் உள்ள முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமாகவும், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் இந்த ஓய்வூதிய திட்டம் 1978ம் ஆண்டு முதல் செயல்பட்டுவருகிறது. தேர்வு செய்யப்பட்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ.6,000 ஓய்வூதியமாக வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் பயனாளராக சேருவதற்கான தகுதிகள்:
-
தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
-
தற்போது நலிந்த நிலையில் (வேலை இழப்பு, வருமானம் குறைவு) இருக்க வேண்டும்.
-
பிறந்த தேதி 30.04.1967-க்கு முன்னர் ஆகவேண்டும் (58 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்).
-
மாத வருமானம் ரூ.6000-ஐ மிஞ்சக்கூடாது.
-
அரசு, தனியார் அல்லது ஒன்றிய அரசின் ஓய்வூதியத்தினை ஏற்காதவராக இருக்க வேண்டும்.
-
சர்வதேச/தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பது அவசியம்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
-
விளையாட்டு சாதனைகள் தொடர்பான சான்றிதழ்கள்.
-
வயது, அடையாளம், பிறப்பிடம் மற்றும் வருமானம் குறித்து 2025ஆம் ஆண்டு பெற்று வைத்திருக்கும் சான்றுகள்.
-
ஓய்வு நிலை பற்றி விவரிக்கும் ஆவணங்கள்.
விண்ணப்ப படிவங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் http://sdat.tn.gov.in இணையதளத்தில் அல்லது தருமபுரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனைத்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து, 31.07.2025 மாலை 5.00 மணிக்குள் தருமபுரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். சென்னையில் உள்ள தலைமையகத்திற்கு நேரில் அல்லது அஞ்சல் மூலம் அனுப்ப தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள தகுதியான முன்னாள் விளையாட்டு வீரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.