பாலக்கோடு, ஜூலை 31 | ஆடி 15 -
பாலக்கோடு பேருந்து நிலையம் பார்க்கிங் ஏரியாவாக மாறி, பொதுமக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. புறநகர் பேருந்து நிலையம் பகுதியில் இருந்து சென்னை, கோவை, சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்துகின்றனர்.
ஆனால், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டு வருகின்றன. சிலர் காலை வாகனங்களை நிறுத்திவிட்டு, வெளியூர் சென்று இரவில் எடுத்துச் செல்லும் நிலையில் உள்ளதால், பேருந்துகளின் இயக்கத்திற்கும் இடையூறு ஏற்படுகிறது. இதனால், பேருந்து நிலையம் தற்போது டூவீலர் ஸ்டாண்ட் போல மாறியுள்ளது. காலை, மாலை நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுவதோடு, தாறுமாறாக நிறுத்தப்பட்ட வாகனங்கள் காரணமாக அதிவேகத்தில் வரும் வாகனங்களால் விபத்து அபாயமும் அதிகரித்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து, பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணிக்க வசதியாக பேருந்து நிலையத்தைச் சீரமைக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.