பென்னாகரம், ஜூலை 11 (ஆனி 27) -
பென்னாகரம் ஒன்றியத்திற்குட்பட்ட சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் “மகிழ் முற்றம்” திட்ட தொடக்க விழா பள்ளி தலைமை ஆசிரியர் மா. பழனி தலைமையில் நடைபெற்றது. மாணவர்களின் கல்வி மற்றும் ஆளுமை வளர்ச்சிக்காக பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டியபடி இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதன்படி மாணவர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு குழுவிற்கும் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் வழிகாட்டி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
குழுக்கள் முறையே சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம், வெள்ளை என தனித்தனி கொடிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டு, தலைவர்களுக்கு வழங்கப்பட்டது. மாணவர்களிடையே கற்றல் திறன் வளர்ச்சி, குழு மனப்பான்மை, நேர்மறை நடைமுறை, தலைமையுடைமை, ஆசிரியர் மாணவர் உறவுகள் ஆகியவற்றை வலுப்படுத்தும் நோக்கில் இந்த குழு அமைப்புகள் செயல்படவுள்ளன. விழாவில் பள்ளி ஆசிரியர்கள் வளர்மதி, பழனிச்செல்வி, கல்பனா, திலகவதி, ராஜேஸ்வரி, அனுப்பிரியா, சத்துணவு அமைப்பாளர் அம்பிகா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். மன்ற ஒருங்கிணைப்பாளர் வளர்மதி நன்றியுரை வழங்கினார்.