![]() |
மாதிரி படம். |
தருமபுரி, ஜூலை 1 (ஆனி 16):
தருமபுரி மாவட்ட எல்லைக்குள் உள்ள திட்டமில்லா மற்றும் மலையிட பகுதிகளில், 01.01.2011-க்கு முன் கட்டப்பட்டு தற்போது செயல்பட்டு வரும் அனுமதியற்ற பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு, அரசு புதிய வாய்ப்பு அளித்து விண்ணப்பிக்க கால நீட்டிப்பு வழங்கியுள்ளது. முன்னதாக, 2018 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கல்வி நிறுவனங்கள் தங்களது கட்டிடங்களுக்கு அனுமதி பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க அரசு வாய்ப்பு வழங்கியிருந்தது. பின்னர், 2022-இல் ஒரு வருட கால நீட்டிப்பு அளிக்கப்பட்டது.
இப்போது, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை வெளியிட்ட அரசாணை எண்.92, நாள்: 26.06.2025-ன் மூலம், 01.11.2011-க்கு முன் கட்டப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு மேலும் ஒரு வருட கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்கள் கட்டிடங்களுக்கு அரசு அனுமதி (இசைவு) பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதற்காக, பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்களது தேவையான ஆவணங்களை தயார் செய்து, www.tn.gov.in/tcp என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, தங்களது கல்வி நிறுவனங்களை சட்டபூர்வமாக பதிவு செய்து, அரசின் அனுமதி பெற மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டார்.