பாலக்கோடு, ஆடவை (ஆனி) 17-
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள வேளாவள்ளி கிராமத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்தார். அந்த பகுதியில் கூலி தொழிலாளராக உள்ள சித்தன் மற்றும் அவரது மனைவி பிரியா தம்பதிக்கு சஷ்மிதா (9) மற்றும் ஹரிபிரசாத் (6) என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதில் சஷ்மிதா, அனுமந்தபுரத்தில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பிலும், அவரது தம்பி ஹரிபிரசாத் 2ஆம் வகுப்பிலும் பயின்று வருகின்றனர்.
நேற்று மாலை சஷ்மிதா பள்ளி முடிந்து வீடு திரும்பியபோது, வீட்டின் முன் நின்றுக்கொண்டிருந்தார். அச்சமயம் அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மோதியதில் கீழே விழுந்தார். இந்த விபத்தில் அவர் தலையில் படுகாயம் ஏற்பட்டது, உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி சஷ்மிதா உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.