தருமபுரி, ஆடவை (ஆனி) 16-
தருமபுரி மாவட்டம் (ம) வட்டத்தில் அமைந்துள்ள தருமபுரி தங்கவேல் தெருவைச் சேர்ந்த பிரகாஷ்குமார் (வயது 54, தந்தை பெயர்: வீரபத்திரன்) என்பவர், தருமபுரி வெள்ளிச்சந்தையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், கடந்த 19.11.2019 அன்று, அந்த பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்த 10 வயது மாணவியிடம், வகுப்பின் போது ஆசிரியர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மாணவி புகார் அளித்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி தன்னுடைய பெற்றோரிடம் கூறியதும், மாணவியின் தாய் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பிரகாஷ்குமாரின் மீது வழக்குப் பதிவு செய்தனர். வழக்குத் தொடர்ந்த நிலையில், குற்றச்செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட ஆசிரியர் தருமபுரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் சரணடைந்தார். தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, தருமபுரி மாவட்ட சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தருமபுரி சிறப்பு போக்சோ நீதிமன்ற பொறுப்பு நீதிபதி திருமதி U. மோனிகா, M.A., அவர்கள், 30.06.2025 அன்று தீர்ப்பு வழங்கினார். அதில், பிரகாஷ்குமார் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதம் விதிக்கப்பட்டது.