தருமபுரி, ஜூலை 30 | ஆடி – 14 -
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே கெங்கலாபுரம் மேம்பாலம் அருகே, பத்து நாட்களுக்கு முன் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் வாகன மோதி விபத்தில் படுகாயம் அடைந்தார். அவரை அங்குள்ள கிராம நிர்வாக அலுவலர் மத்தியிலாக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால், அவரைப் பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்காதநிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் தொப்பூர் காவல் நிலையம் வழியாக மை தருமபுரி அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. அமைப்பின் தலைவர் சதீஷ்குமார் ராஜா, ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், அமைப்பாளர் செந்தில், தன்னார்வலர் கணேஷ் ஆகியோர் தலைமை காவலர் கதிரேசனுடன் சேர்ந்து அவருக்கு இறுதி மரியாதை செலுத்தி, உடலை நல்லடக்கம் செய்தனர்.
மை தருமபுரி அமைப்பு இதுவரை 152 ஆதரவற்றவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்துள்ளதை நினைவுகூர வேண்டும். யாருக்கும் உறவாக இல்லாதோருக்கும் உறவாய் நிற்கும் அமைப்பாக இது செயல்படுகிறது.