தருமபுரி, ஜூலை 30 | ஆடி – 14
தருமபுரி மாவட்டம் முக்கல் நாயக்கன்பட்டி ஊராட்சி கீழ் இராஜதோப்பு, மேல் இராஜதோப்பு கிராமங்களில் அமைந்துள்ள ஸ்ரீ புள்ள குட்டி மாரியம்மன் கோவிலில் வருடாந்த திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 29.07.2025 (செவ்வாய்க்கிழமை) அதிகாலை சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்வும் நடைபெற்றது.
30.07.2025 (புதன்கிழமை) அன்று தாரை தப்பட்டை, மேளதாளம், பம்பை வாத்தியங்கள் முழங்க, கீழ் மற்றும் மேல் இராஜதோப்பு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் பூ கரகம், தீச்சட்டி, மாவிளக்கு எடுத்துக் கொண்டு, அழகு குத்தி அணிவகுத்து மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். நிகழ்வில் ஸ்ரீ விநாயகர் கோவிலில் இருந்து அம்மன் கோவில்வரை நடைபெற்ற ஊர்வலத்தில், பக்தர்கள் ஆரவாரத்துடன் கலந்து கொண்டு பக்தி பூர்வமாக வழிபட்டனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் இருந்து பக்தர்கள் திரண்டனர்.